சத்சித்ஆனந்தன்

சத்சித்ஆனந்தன்

சத்சித்ஆனந்தன்

ஶ்ரீநரசிம்ம ஸ்வாமிஜி அருளிய ஶ்ரீசாய் அஷ்டோத்திர சத நாமாவளியில் இருக்கும் நாமங்களான, ஆனந்தாய நம: 
ஆனந்ததாய நம:,  இந்த இரண்டு நாமாவளிகள் இடையில் ஒரே ஒரு எழுத்துதான் வித்தியாசம். ஆனால், அந்த ஒரு வித்தியாசத்தில்தான் எவ்வளவு பெரிய தத்துவம் பொதிந்திருக்கிறது. 
இந்த இரண்டு நாமாவளிகளுக்கும் பொருத்தமாக பாபா நிறைய  அதிசயங்களை நிகழ்த்தியிருக்கிறார்.

முதல் நாமாவளியின் பொருள் 'ஆனந்தமாக இருப்பவர்’ என்பதாகும். அடுத்த நாமாவளியின் பொருள் 'ஆனந்தத்தை வழங்குபவர்’ என்பதாகும். இரண்டையும் இணைத்து பொருள் கொள்ளும் போது, நாம் ஒருவரிடம் ஒன்றைக் கேட்டால், நாம் கேட்பது அவரிடம் இருந்தால்தான், அவரால் அதை நமக்குக் கொடுக்க முடியும். தன்னிடம் இல்லாத ஒன்றை அவரால் நமக்குத் தரமுடியாது.
சாயிநாதரிடம் நாம் கேட்பது நிச்சயமாகக் கிடைக்கும். ஏனெனில் ஆனந்தமாக இருப்பவரால் தான் ஆனந்தத்தை கொடுக்க முடியும். 

'அதுவும் பூர்ணம்; இதுவும் பூர்ணம்; அந்த பூர்ணத்தில் இருந்தே இந்த பூர்ணம் தோன்றி உள்ளது. பூர்ணத்தில் இருந்து பூர்ணத்தை எடுத்த நிலையிலும், பூர்ணம் அப்படியே இருக்கிறது’ என்று யசூர் வேதத்தில் கூறியிருப்பதைப்போல, ஆனந்தமயமாகவும் ஆனந்த சொரூபியாகவும் இருக்கும் சாயிநாதரிடம் இருந்து, நாம் ஆனந்தத்தைக் கேட்டுப் பெற்றாலும்கூட, அவரிடம் இருக்கும் ஆனந்தம் அணுவளவும் குறைந்துவிடப் போவதில்லை.

********

புனித யாத்திரை

ஆண்டவன் தன்னை பிரார்த்திக்க வேண்டும் என்று விரும்பினால், உங்களுக்கு ஏதாவதொரு துன்பத்தைக் கொடுப்பான். வழியில் உங்களது வாகனம் நின்றுவிடலாம். அல்லது அதைவிட மோசமான நிகழ்ச்சி ஏதாவது நடக்கலாம். அதனால்தான் துன்பங்கள் ஆண்டவனின் வரப்பிரசாதங்கள் என்று கூறுகின்றோம்.

நமக்கு சிக்கல் வரும்போதுமட்டுமே ஆண்டவனை இதயப்பூர்வமாக பிரார்த்திக்கின்றோம். மற்ற சமயங்களில் நாம் ஆண்டவனை மேம்போக்காக நினைக்கின்றோம். துன்பம் நேரும்போது மட்டுமே, என்னால் இனி இயலாது, சிக்கலை உன்னிடம் ஒப்படைக்கின்றேன். உன்னை நம்புகின்றேன். நீ தான் அதைத் தீர்க்க வேண்டும் என்று புலம்புகின்றோம்.

தேவைப்பட்டால் ஆண்டவனை வணங்குவதல்ல வாழ்க்கை. வாழ்க்கை என்பதே ஆண்டவனை வணங்குவதற்குத் தான். வாழ்க்கை என்பதே ஆண்டவனை நோக்கிச் செல்லும் புனித யாத்திரை. ஆண்டவனை மட்டுமே நம்பி வெறுங்கையுடன் செல்வதே உண்மையான புனித யாத்திரை.

******
அகந்தை

நாம் இறைவனின் உண்மையான தன்மையை அறிந்து கொண்டால், அவன் நம் அகந்தையை அழிக்க உதவுவான். அகந்தை என்பது ஆன்மாவை நம்பி இருக்கின்றது. நான் என்பது ஆன்மாவை நம்பியிருப்பதால் நான் சுதந்திரமானவன் இல்லை என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

ஆயினும் நம்மை இறைவனிடத்தில் சமர்ப்பித்துவிட்டால், நாம் சுதந்திரம் பெற்றுவிடுவோம். ஏனெனில் நமது எல்லா செயலுக்குண்டான பொறுப்பையும் இறைவனே ஏற்றுக்கொள்கின்றான். அப்பொழுது அகந்தை நான் செய்கின்றேன், என்பதற்குப் பதிலாக, நான் கருவி, என் மூலமாக இறைவன் செய்கின்றான் என்று சொல்லும்.

எனவே இறைவனே ஒவ்வொன்றையும் செய்கின்றான். நீங்கள் செய்வதற்கு ஒன்றும் இல்லை. உங்களுக்கு எந்த பொறுப்பும் இல்லை. உங்களது ஒரே பொறுப்பு இறைவனிடம் சரணாகதி அடைவதே! உங்களது எல்லா செயல்களையும் இறைவனை செய்யவிடுவதே உங்களது அகந்தையை அழிக்கும் ஒரே வழியாகும்.

*****

ஆன்மீக சேவை

ஆன்மீகச்சேவை செய்யும்போது உங்கள் மனதில் அமைதி இல்லை என்றால், நீங்கள் அதை முறையாகச்செய்யவில்லை என்று அர்த்தம்.  நீங்கள் செய்யும் சேவை உங்களுக்கு அமைதியையும், மகிழ்ச்சியையும் கொடுத்திருக்க வேண்டும். செய்யும் சேவை எதுவென்றாலும் செய்வதில் திருப்தி வேண்டும். மேலும் மேலும் சேவை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் வர வேண்டும்.

சேவை செய்யும் போது மெய்மறந்து செய்ய வேண்டும். சேவை சுமையாகத் தெரியாமல் ஆனந்தமாக தோன்ற வேண்டும். சுமையாகத் தெரிந்தால், கூலிக்கு வேலை செய்வதைப் போன்றதாகும். செய்யும் சேவையில் எதையும் எதிர்பார்த்து செய்யக்கூடாது. நன்றியை எதிர்பார்பதுகூட பலனை எதிர்பார்ப்பதாகும்.

பலனை கருதி செய்யும் சேவை, சேவையே அல்ல. கூலி வேலை கூலிக்காகச் செய்யப்படுவது போன்று சேவை சேவைக்காக செய்யப்பட வேண்டும். அது செய்யப்படும்போதே மறக்கப்பட்டுவிட வேண்டும். அதுவே உண்மையான ஆன்மீக சேவையாகும்