சூட்சுமவாதி

சூட்சுமவாதி

சூட்சுமவாதி

சொ. அகஸ்டின்

சூக்குமம் நிறைந்த இவ்வுலகம் சூக்குமத்திற்குள்தான் இயங்கிக் கொண்டிருக்க வேண்டும் அவ்வாறான இயக்கத்தை ஆதியில் எவன் கண்டு உணர்ந்தானோ அவனே சூக்சுமவாதியாக பிரதிபலித்தான். அவ்வாறாக தவத்தின் மூலம் கிடைக்கும் பேராற்றலை  வழி வழியாக கடத்தி வரும் போது அவரே குருவாகவும், கடவுளாகவும் காட்சியளித்தார்கள். இம்மாதிரியான தவத்தை நவீன காலத்திற்க்கேற்றார் போல் பாடத்திட்டமாக வடிவமைத்து கற்றுத் தரும் மாஸ்டர்கள் பல்கி பெருகி விட்டதால் வழி வழியாக வந்த குருமார்களை கண்டுணர்வதில் சிக்கல் ஏற்படுகிறது.

அச்சிக்கலை தவிர்த்து பார்த்தால் இக்காலத்தில் நமக்கு கிடைத்த கிடைத்தற்கரிய பொக்கிஷமாக பகவான் சாய்நாதர் கண்காணிப்பில் பல்வேறு மகான்களால் வளர்த்தெடுக்கப்பட்ட   நம்குரு யோகி ஸ்ரீராம் பாபா அவர்களே இன்று இவ்வுலகிற்கு நியதகுரு வாக காட்சியளிக்கிறார் . அவரை அணுகும் ஒவ்வொருவரும் அவரின் சூச்சுமத்தை புரிந்துக்கொள்கின்றனர். மேலும் தியானத்தின் போது குருவின் உள்ளங்கை வழியாக பிரபஞ்ச பேராற்றலை சீடனின் உச்சந்தலையில் செலுத்தி உடல் முழுவதும் பாயச்  செய்யும் போது அவரின் சூட்சுமத்தை உணர்ந்து அனுபவிக்கும் வாய்ப்பையும் பெறுகின்றனர் .

இவ்வாறு குருவின் சூட்சுமத்தை உணர்ந்த நாம் அவர் ஓர் சூட்சுமவாதியாக நிகழ்த்திய நிகழ்வை இங்கே பதிவிட விரும்புகிறேன். கடந்த 2019 ஆம் ஆண்டு  ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதியில் ஆவோ சாய் சேவா டிரஸ்ட் நடத்திய விருது வழங்கும் விழாவிற்கு இரண்டு நாள் பயணமாக கோவை மாநகர் இடையார் பாளையத்தில் அமைந்துள்ள “ஸ்ரீ சீரடி சாய் குருவருள்” திருக்கோயிலுக்கு  24 ஆம் தேதி மாலை 4.00 மணியளவில் குருவுடன் சென்றடைந்தேன்.அக்கோயில் வளாகத்தில் மண்டபம் அமைந்துள்ளதால் நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்களும் டிரஸ்ட் உறுப்பினர்களும் பரபரப்பாக காணப்பட்டனர். நம் குருவின் வருகையை அறிந்து சிறப்பான வரவேற்பு அளித்து  இரவு தங்குவதற்க்கான தனி அறையையும் ஒதுக்கி கொடுத்தனர். வந்த களைப்பு தீர அறைக்கு சென்று சற்று ஓய்வெடுத்துக்கொண்டு 5.00 மணிக்கு கோயில் வளாகத்திற்கு வந்தோம் . 

குருவிற்க்காக திரு. சரவணன் என்பவர் காத்துக்கொண்டு இருந்தார் குருவை கண்டதும் நமஸ்காரம் செய்து ஆசி பெற்றார். பின்பு குருவிடம், அவர் மனதில்  நீண்ட நாட்களாக தேக்கி வைத்திருந்த அன்னை ராதாகிருஷ்ணமாயி பற்றி தனி புத்தகம் வெளியிடவேண்டும் என்ற ஆசையை அருவி போல் கொட்ட ஆரம்பித்தார் . அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த நம்குரு அவரின் ஆர்வத்தையும் பக்தியையும் கண்டு இப்பணி உன்னால் தான் நடக்கும் அதுவும் மிக விரைவில் நடக்கும். அடுத்த ஆண்டு இறுதிக்குள் இப்பணி முடிந்து புத்தக வெளியீட்டில் நான் கலந்து கொள்வேன்  எக்கவலையும் வேண்டாம்  என கூறி அருளாசி வழங்கினார். 

அதற்கு முன் இப்பணியை மூன்று பேர் செய்வதாக உள்ளனர் அதில் நானும் ஒருவன் உமக்காக விட்டு கொடுக்கிறேன் நீங்கள் வேறு எவருக்காவது விட்டு கொடுத்தால் நானே எழுத நேரிடும் பார்த்துக்கொள்ளுங்கள் என்றும் கூறினார் மேலும் இப்புத்தகத்திற்காக பல்வேறு தகவல்களை சேகரித்து வைத்துள்ளேன் ஏதேனும் சந்தேகம் ஏற்படுமாயின் தயக்கம் வேண்டாம் எந்நேரத்திலும் அழைக்கலாம் என கூறி  வாழ்த்து சொல்லியும் விடைபெற்றார் நம்குரு. இருப்பினும் இப்பணியை எவ்வாறு முடிக்க போகிறேன் என்ற அச்சம் அவர் முகத்தில் நிலவியதை குரு அறிந்திருந்தார் . 

ஆன்மீகத்தை பற்றி பேசும்போது மூன்று மணி நேரம் எப்படி சென்று என்றே தெரியவில்லை பகல் கழிந்து இரவு கூடியதை கண்ட பின்பு தான் தெரிந்தது  மணி 8.00 ஆகிவிட்டது. அதன் பின் இரவு உணவு அருந்திவிட்டு தங்கும் அறைக்கு சென்றோம். மறுநாள் காலை நிகழ்ச்சி தொடங்கி மதியம் முடிக்கப்பட்டதால் அங்கிருந்து அருகில் இருக்கும் சில இடங்களை சுற்றிபார்த்துவிட்டு அன்று மாலை  சென்னைக்கு புறப்பட ஆயத்தமானோம்.

அந்நேரத்தில் எங்களை இடைமறித்த சரவணன் அவர்கள், நம் குருவை பார்த்து நேற்று நீங்கள் பேசிவிட்டு புறப்பட்ட பின் என்னால் இப்புத்தகத்தை அச்சமின்றி எழுத முடியுமா? ஏதாவது தடங்கல் வருமா ? இதற்கு முன் இம்மாதிரியான புத்தகத்தை எழுதின அனுபவம் இல்லை இது சரியாக வருமா? என்று பல்வேறு குழப்ப நிலையில் இருக்கும் போது நேற்றிரவு மீண்டும் என்னை சந்தித்து ஒரு அடி உள்ள ஒரு பிரம்பை என்னிடம் கொடுத்து இப்பணி முடியும் வரை உமக்கு உறுதுணையாக இருக்கும் என்று கூறி புறப்பட்டீர்கள்.

அதன் பிறகு எனக்குள் ஏதோ ஓர் உத்வேகம் பிறந்தது போல் இருந்தது என்றார். எப்போதும் போல் நம்குரு மௌனமாக சைகையிலேயே  புறப்படுகிறோம் என்பதை  சொல்லி புறப்பட்டார் . இந்நிகழ்வு சரவணனுக்கு ஆச்சர்யமில்லை அது தன்னுடைய மன தைரியத்திற்காக மீண்டும் தன்னை சந்தித்து கொடுக்கப்பட்ட பிரம்பாக நினைத்து கூறியிருக்கலாம். 

ஆனால் எனக்கு தான் தாங்க முடியாத ஆச்சர்யம் ஏனென்றால் அன்றிரவு முழுவதும் குரு அவர்கள் எங்களுக்காக ஒதுக்கப்பட்ட தனியறையில் எங்களுடன் பேசிக்கொண்டிருந்தார். குரு அவர்கள் ஏற்கனவே எங்களிடம் இராதா கிருஷ்ணமாயி பற்றிய தகவல்களைக்கூறி அவரைப்பற்றி நமது புத்தகத்தில் தொடராக எழுதப்போகின்றேன் என்று கூறியிருந்தார்கள்.அதை நான் சுட்டிக்காட்டி நீங்கள் ஏன் இந்த புத்தகத்தை சரவணன் எழுதட்டும் என்று விட்டுக்கொடுத்தீர்கள் என்று கேட்டேன். 

குரு அவர்கள் அன்று இரவு முழுவதும் சரவணன் மற்றும் இராதாகிருஷ்ணமாயி  பற்றிய பல்வேறு தகவல்களையும், சரவணன் மற்றும் இராதாகிருஷ்ணமாயி  இருவருக்கும் உள்ள முன் ஜென்ம  தொடர்பை பற்றியும் கூறி அதனால் அவர் தான் இந்த புத்தகத்தை எழுத வேண்டும் என்றும் கூறினார்.

இவ்வாறு இரவு முழுவதும் பேசிக் கொண்டே இருந்தோம். அப்படி இருக்கையில் சரவணனை சந்தித்து எப்படி அவருக்கு பிரம்பை கொடுத்திருக்க முடியும்? ஒரே நேரத்தில் எப்படி இரண்டு இடத்தில் இருந்திருக்க முடியும் என்பதில் தான் என்னுடைய ஆச்சர்யம்! இந்நிகழ்வை யாரிடமும் இதுவரை நான் பகிர்ந்தது இல்லை  இக்கட்டுரை மூலமாக தான் வெளிப்படுத்துகிறேன். 

இதை உறுதி படுத்தும் விதமாக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு (2023) முன் கூத்தனூரில் நான் சரவணனை சந்திக்கும் போதும் குரு கொடுத்த பிரம்பை பத்திரமாக வைத்துள்ளேன் என்ற தகவலையும் என்னிடம் கூறினார். அது சாதாரண பிரம்பு என்றால் பத்திரபடுத்த வேண்டிய அவசியமில்லை என்ற கேள்வியும் எனக்குள்ளே எழுந்தது. இறை பணி என்பதால் இறைவன் தான் வரவேண்டும் என்பதில்லை நியதகுருவான யோகி ஸ்ரீராம் பாபா அவர்களே இறைவனாக வருவார்  என்பதை நான் நேரில் கண்ட காட்சியின் மூலம் உணர்ந்தேன். ஆகவே அன்பர்களே! சூட்சுமத்தோடு தொடர்பில்லாமல் சூட்சுமம் நடத்த இயலாது ! சூட்சுமவாதியோடு பயணிக்கிறோம் என்பதை உணராமல் சூட்சுமத்தை அறிய இயலாது.

நமது குருவுடன் ஷீரடி செல்லும் போது குரு பாபாவாகவே காட்சி தந்ததை அடுத்த பதிவில் பகிர்கிறேன்.

குரு வாழ்க! குருவே துணை!

*****