பயணக்கட்டுரை
பயணக்கட்டுரை
தனிமைப் பயணம்.
திருமதி. மாதங்கி பாலாஜி
பெண்களுக்கு குறிப்பாக குடும்ப பெண்களுக்கு தனியாக ஒரு இடத்திற்கு செல்ல வேண்டுமென்றால் ஆயிரம் தடைகள் குடும்பத்திலிருந்தே உண்டானாலும், முக்கியமாக நமது சோம்பேறித்தனத்தினால் பல வாய்புகளை நாமே தவிர்த்து விடுகின்றோம்.
குரு தனது சத்சங்கத்தில் பலமுறை தனிமையாக பயணம் செய்யுங்கள். உங்களுக்குள் பல மாற்றங்களை உணர்வீர்கள் என்று கூறுவார். தனியாக பயணம் செய்ய வேண்டும் என்கிற உத்வேகம் அவ்வப்போது எழுந்தாலும், பயம், சோம்பேறித்தனம் மற்றும் நான் எதிர்பார்க்கும் வசதிகள் கிடைக்குமா என்ற பல குழப்பங்கள் என்னுள் எழும்.
ஆனாலும் எல்லா விஷயத்திலும் எனக்கு ஊக்கம் அளித்து ‘நான்’ வெடித்துக் கொண்டு வெளியே வருவதற்கு ஊக்க சக்தியாக திகழும் எனது கணவர் திரு.பாலாஜியின் உந்துதல்தான் முதன் முறையாக அஹோபிலம் செல்ல தூண்டியது. சென்ற ஆண்டு இரண்டு நாட்கள் ஒரு பயண ஒருங்கிணைப்பாளர் மூலம் அஹோபிலம் பயணம் செய்தேன். அது எனக்கு ஒரு நம்பிக்கையை அளித்தது.
அதன் தொடர்ச்சியாக கடந்த ஜனவரி மாதம் 4 ஆம் தேதியன்று ஒரு பயண ஒருங்கிணைப்பாளர் மூலம் காஞ்சிபுரத்தில் உள்ள திவ்ய தேசங்களுக்கு சென்றேன். இம்முறை குருஜி கூறும் ‘தனிமையில் பயணம்’ என்ற எண்ணத்துடன் சென்றேன். பயணம் எண்ணவோ ஒரு நாள்தான், ஆனால் கிடைத்த அனுபவங்கள் ஏராளம். அதை பகிர்ந்து கொள்வதுதான் இந்த கட்டுரையின் நோக்கம்.
நான் ஒரே நாளில் சென்ற 15 கோவில்களின் அமைப்பைப் பற்றியோ அதன் தலபுராணங்களையோ அந்த கோவில்களுக்கு செல்வதால் கிடைக்கும் புண்ணிய பலன்களைப் பற்றியோ கூறப்போவதில்லை. தனிமையில் மேற்கொள்ளும் பயணத்தின் ஆனந்தத்தைப் பற்றியும், அதன் அவசியம் பற்றியும், அதன் மூலம் நான் அடைந்த புண்ணியத்தையும் கூறப்போகிறேன்.
பயண ஒருங்கிணைப்பாளர் மூலம் சென்றாலும், அந்த குழுவில் இருந்த சுமார் 50 நபர்களும் எனக்குப் புதியவர்களே! எனக்கு அடுத்த சீட்டில் அமர்ந்திருக்கும் பெண்மணிகூட புதியவர்தான் என்பதால் வெறும் சிரிப்பை மட்டும்தான் பகிர்ந்து கொள்ளமுடியும் என்பது இதுபோன்ற பயணங்களின் சிறப்பம்சம்.
பயணத்திற்கு முன்பு குருவின் கூற்றுப்படி நான் ஒரு சில தீர்மானங்களை எடுத்துக்கொண்டேன். யாரிடமும் தானாக போய் அவர்களின் விவரங்களை கேட்கக்கூடாது. பேச முயலக் கூடாது, முடிந்த வரை தனியாக சுற்றி பார்த்துவிட்டு வண்டியில் வந்து அமர்ந்து கொள்ள வேண்டும், கோவில் சிற்பங்ககளின் அழகை ரசித்து பார்க்க வேண்டும், அந்த இடங்களில் உள்ள சக்தியை உணர முற்பட வேண்டும் போன்றவை ஆகும்.
காலை சரியாக 5.30 மணிக்கு வண்டி சென்னை அசோக் பில்லரில் இருந்து புறப்பட்டது. புறப்பட்டவுடன் ஒருங்கிணைப்பாளர் நாம் எந்தெந்த கோவில்களுக்கெல்லாம் செல்ல போகிறோம், அதன் புராணம் என்ன என்ற செய்தியை விளக்கும் வகையில் வேளுக்குடி ஸ்வாமியின் ஆடியோவை ஒலிக்கச் செய்தார். எனக்கு அதன்மீது ஆர்வம் இல்லாததாலும், காலையில் விரைவாக விழித்துக்கொண்டதாலும் அதை கேட்ட முடியாதபடி தூக்கம் கண்ணை சுழற்றிக்கொண்டு வந்தது. காஞ்சிபுரம் வந்தடைந்தபோதுதான் விழித்துக்கொண்டேன்.
அவர்கள் ஏற்பாடு செய்த இடத்தில் காலை உணவை முடித்து கொண்டு ஒவ்வொரு கோவிலாக ஓடினோம் (ஒரே நாளில் 15 கோவில்கள் என்றால் சும்மாவா?). இதில் வண்டியில் இருந்து முதலில் இறங்கி கடைசியாக வருபவர்கள், சன்னதி சன்னதியாக ஸ்லோகம் சொல்லி வழிபடுபவர்கள், கோவிலை சுற்றி வரும்போது நந்தவனத்தில் இருக்கும் செடிகளைப் பற்றி பேசி ஆராயும் பெண்களையும் கண்டேன்.
மேலும், தங்கள் குடும்பக் கதையை பேசிக்கொண்டும் மற்றும் தங்கள் முந்தைய பயணத்தைப் பற்றி பெருமையுடன் பேசிக்கொண்டு வரும் நண்பர்கள் கூட்டம், அடுத்து எங்கே? என்று ஒருங்கிணைப்பாளரிடம் கேட்டுக் கொண்டே வரும் சிலரும், மூலவருக்கு கண்டிப்பாக அர்ச்சனை செய்தே ஆக வேண்டும் என்ற பிடிவாதத்தில் இருப்பவர்கள் போன்ற பல வகையான புனித யாத்திரீகர்களைக் கண்டேன். சரி, இவர்கள் அனைவரும் இறை அருள் தேடி அந்த இடங்களுக்கு வரவில்லை என்பதும், இது மாதிரி வந்தால் இறை அருள் கிடைக்காது என்று அடிக்கடி குருஜி கூறுவதையும் நினைவுபடுத்திக் கொண்டேன்.
மனித மனம் கண்டிப்பாக அனைவரையும் கவனித்து சில அபிப்ராயங்களை ஏற்படுத்திக் கொள்ளும் தானே! அதுபோலவே நானும் இவர்கள் எல்லோரும் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று யோசித்த போது,
“நீ இவர்களை பற்றி அறிந்து கொள்ளவா இங்கு வந்தாய்?” என்கிற உட்குரல் பளார் என அறைந்தது. “நிகழ்வுகளோடு இணைந்திருங்கள். நிகழ்வை உருவாக்காதீர்கள்” என்ற குருஜியின் வார்த்தை நினைவிற்கு வந்தது.
இனி நான் எதைப்பற்றியும் யோசிக்காமல், அபிப்ராயங்களை உண்டாக்கிக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன். புலன்கள் அதனதன் வேலையே செய்து கொண்டுதான் இருந்தன, மற்றவர்களின் பேச்சுக்களும், நடவடிக்கைகளும் கவனித்தேன், ஆனால் சிந்தனையை அதன் மேல் ஓட விடவில்லை. அந்த அனுபவம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நான் ஏற்கனவே எடுத்துக்கொண்ட தீர்மானங்களினால் யாரிடமும் சென்று பேசவும் இல்லை, ஆனால் என்னிடம் வந்து பேசியவர்களுடன் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு மட்டும் பதிலளித்தேன். மனம் மெல்லமெல்ல அடங்கத் தொடங்கியது.
மதியத்திற்குள் மனம் லேசாக ஆனது போல, அனைத்து நிகழ்வுகளிலும் நான் இருக்கிறேன், வெறும் சாட்சியாக என்பது போலத் தோன்றியது. குருஜி கூறிய தனிமைப்பயணம் இவ்வளவு ஆனந்தமா என்பதை உணரத் தொடங்கினேன். இனி கண்டிப்பாக இதுபோல அந்நியர்களுடன் அவ்வப்போது பயணிக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டேன்.
குரு யோகி ஸ்ரீராம் பாபாவைப் போன்று எளிமையாக, நடைமுறை வழிமூலம் (Practical way) ஆத்ம ஞானத்தை போதிக்கும் குருவை அடைந்ததற்கு என்ன தவம் செய்தேனோ! என்கிற நன்றி பெருக்குடன் இந்த கட்டுரையை எழுதுகிறேன். குரு அனுக்கிரகத்தால் பயண ஒருங்கிணைப்பாளர் கூட இல்லாமல், விரைவில் பயணம் செய்ய தைரியம் வரவேண்டும் என்ற பிரார்த்தனையுடன் இந்த அனுபவ பகிர்வை முடிக்கிறேன். தனிமையில் பயணம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஆனந்த அனுபவம். அனைவரும் கண்டிப்பாக இதை அனுபவிக்க வேண்டும்.
நன்றி! வணக்கம்!